Friday, 8 July 2016

     
                                                           

இல்லற வாழ்க்கை



“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பார்கள். பன்னிரண்டு வயதுச் சிறுவன் இராமசாமியின் வாழ்க்கையில் அது உண்மையாயிற்று.
பள்ளிப்படிப்பு ஏறவில்லை. எனவே கடையில் வேலை செய்யப் பழக்கினார் தந்தை. அங்கு தனது பேச்சுத்திறத்தால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தான் இராமசாமி. அவனது உற்சாகமான வார்த்தைகளால் வந்தவர்கள் வியப்படைந்தார்கள். ஐந்து ரூபாய் பொருளை எட்டு ரூபாய்வரை விலை ஏற்றி விற்கும் சாமர்த்தியம் இராமசாமிக்கு கைவந்த கலையாயிற்று.
“சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது”
என்ற குறளுக்கு ஏற்ப இராமசாமியின் வாதத்திறமை வருவோரை வாயடைக்கச் செய்தது.
வீட்டில் பாகவதர்கள், சங்கீத வித்வான்கள், பண்டிதர்கள், வேத பிராமணர்கள் என எப்போதும் கூட்டம் நிரம்பிக் காணப்படும். அவர்கள் சொல்லும் இராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கேட்பார். தர்க்கம் செய்வார். அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு பதிலை சொல்லி சமாளிப்பார்கள். அப்பொழுதிலிருந்தே இராமசாமிக்கு இந்துமதப் புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் இவற்றின்மீது வெறுப்பு உண்டாயிற்று. அதன் காரணமாக அவர் கடவுள் இல்லை, கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்றும் உறுதியாக நம்பினார்.
வணிகத்தில் அவரது பேச்சுத்தன்மையால் வியாபாரம் பெருகிற்று.
கடைக்கு கணக்கு எழுதவும் தந்தையார் கற்றுக் கொடுத்தார். கடைக்கு வருபவர்களிடமும் தர்க்கம் செய்வதில் அவருக்கு நிகர் அவரே. அந்த இளம்வயதிலேயே அவரது பேச்சுத்திறன் குறிப்பாக தர்க்கம் செய்யும் ஆற்றல் தடையின்றி வளர்ந்தது. பின்னாளில் அவரது அழுத்தந் திருத்தமாக அரசியல் சொற்பொழிவுகளுக்கு அதுவே காரணமாயிற்று.
வியாபார நேரம்போக, ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஊர்சுற்றத் தொடங்கினார். காவிரி ஆற்றுப் படுகையில் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்து களித்தார். பெற்றவர்கள் கவலைப்பட்டார்கள்.
விளையாட்டாய்க் காலம் ஓடிற்று. இராமசாமிக்கு வயது பத்தொன்பதாயிற்று. திருமணம் செய்து வைத்துவிட்டால் பொறுப்பு வந்துவிடும் என்று பெற்றோர்கள் எண்ணினர்.
இராமசாமிக்கு பெண் பார்க்கத் தொடங்கினார்கள். இராமசாமி தனது உறவுக்காரப் பெண் நாகம்மையை மணக்க விரும்பினார். சிறுவயது முதலே நாகம்மையுடன் ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்தவர். எனவே, அவர் அந்தப் பெண்ணைத்தான் மணப்பேன் என்று பிடிவாதம் செய்தார்.
பெற்றோர்கள் சொல்லுக்கு எதிர்சொல் சொல்லாத கடுமையான காலம் அது. அவர்கள் பார்த்துப் பேசும் பழக்கமும் கிடையாது. அந்தச் சூழ்நிலையில் இராமசாமி தன் விருப்பத்தில் உறுதியாக நின்றார். புரட்சியின் வேர்கள் அப்போதே முளைவிடத் தொடங்கின.
நாகம்மைக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தெடங்கினர். இராமசாமி படிக்காதவர்; ஊர் சூற்றித்திரிபவர்; எனவே அவருக்குத் திருமணம் செய்து வைக்க நாகம்மை வீட்டில் சம்மதிக்கவில்லை.
நாகம்மையின் வயது 13. ஆனால், அவருக்குப் பார்த்த மாப்பிள்ளையின் வயதோ 50க்கு மேல். அதுவும் இரண்டு முறை திருமணம் ஆகி மனைவியை இழந்தவர். எனவே இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் நாகம்மை.
“மணந்தால் இராமசாமியைத்தான் மணப்பேன். இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன்” என்று நாகம்மையார் தன் அப்பா, அம்மாவிடம் தெளிவாக்க் கூறிவிட்டார்.
வேறு வழி இன்று நாகம்மையின் பெற்றோர் இராமசாமிக்கே தங்கள் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதித்தனர்.
போராட்டமே வாழ்க்கை நியதியாக்க் கொண்டவர் தந்தை பெரியார். இளமையில் திருமணம்கூட போராட்டங்களுக்கும், புகைச்சல்களுக்கும் இடையெதான் நடைபெற்றது.
அன்றைய நாளில் இளம் வயது திருமணம் நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இராமசாமியை இனி நாமும் மரியாதையுடன் பெரியார் என்றே அழைப்போம். திருமணம் நடந்து விட்டாலே பெரிய ஆள்தானே!
பெரியார் – நாகம்மையார் இல்லறம் பிறர்க்கு எடுத்துக்காட்டாகவே அமைந்தது எனலாம்.
கணவரின் குணம் அறிந்து அதற்கு ஏற்ப தன்னையும் மாற்றிக்கொண்டார் நாகம்மையார்.
பெரியார் வீட்டில் யாரும் மாமிச உணவு சாப்பிடமாட்டார்கள். ஆனால், பெரியாரோ மட்டன் பிரியாணி என்றால் மட்டற்ற மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார். அவருக்கு சைவ உணவு பிடிக்காது. எனவே கணவருக்காகத் தனியாக அசைவ உணவு சமைப்பார் நாகம்மையார்; நாகம்மையார் வெள்ளிக்கிழமை விரதம் இருப்பார். சைவ உணவுதான் சாப்பிடுவார். பெரியாருக்கு விரதம் இருப்பதெல்லாம் கட்டோடு பிடிக்காது.
ஒருமுறை நாகம்மையார் சமைத்து வைத்திருந்த சைவ உணவில் அவர் அறியாதவாறு ஒரு எலும்புத்துண்டை மறைந்து வைத்துவிட்டார் பெரியார். நாகம்மையார் பூஜை முடித்து சாப்பிட உட்கார்ந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே எலும்புத்துண்டு தலை நீட்டியது. நாகம்மையார் பதறிப்போனார். இது தன் கணவன் வேலை எனபதையும் உணர்ந்து கொண்டாள்.
அன்றோடு நாகம்மையின் விரதம் போயிற்று. சைவ உணவு சாப்பிடும் வழக்கமும் மறைந்துவிட்டது.
பெரியார் கொஞ்சம் கொஞ்சமாக தன் இல்லத்தரசியாரை தன் கொள்கைகளுக்கு மாறச் செய்தார். தனது தந்திரமிக்க நடவடிக்கைகளால் நாகம்மையார் கோயிலுக்குச் செல்வதையும் அறவே தடுத்து நிறுத்திவிட்டார்.
நண்பர்களுடன் ஆற்றங்கரையில் அமர்ந்து, அரட்டை அடிப்பது மட்டும் ஓயவில்லை. அங்கேயிருந்துகொண்டே சாப்பாடு தயார் செந்து கொடுத்துவிடு என்று நாகம்மையாருக்குச் சொல்லிவிடுவார். நாகம்மையாரும் ருசியாக சமைத்து பாத்திரங்களில் நிரப்பி சாப்பாடு கொடுத்து அனுப்புவார். இப்படி செய்வது மாமனார், மாமியாருக்குப் பிடிக்காது என்றாலும் அவர்களுக்குத் தெரியாமல் சாப்பாடு கொடுத்து விடுவார். இவ்வாறு பெரியாரின் விருப்பங்களுக்கு ஏற்ப சிறந்த மனைவியாக அவர் வாழ்ந்து வந்தார்.
பெரியார் மிகுத்த சிக்கனவாதி; காசை எண்ணி எண்ணிதான் செலவழிப்பார். வீட்டில் சமையலிலும் சிக்கனம் வேண்டும் என்று எண்ணுவார். தேவையில்லாமல் இரண்டு காய்கள் வைத்தால் கோபித்துக்கொள்வார். காபிக்குப் பால் அதிகம் ஊற்றினால், பாலை ஏன் இப்படி வீணாக்குகிறாய்? சிறிது பால் ஊற்றினாலே போதுமே என்பார்.
சில வேளைகளில் “பாலைவிட மோரே உடம்புக்கு நல்லது” என்றுகூட சொல்லுவார்.
நாகம்மையார் பெரியாரின் எல்லாக் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டார். ஆனால், இந்த உணவில் சிக்கனத்தை மட்டும் கடைபிடிக்க தயக்கம் காட்டினார். வீட்டிற்கு வருபவர்களுக்கு வயிறார உணவு பரிமாறி உபசரித்தார். அதே சமயம் வேண்டுமென்றே பெரியாருக்கு சிறிதளவே காய்கறிகள் வைப்பார். இதனால் நாளடைவிலை நாகம்மையார் செய்யும் சமையலில் மட்டும் அவ்வளவாக தலையிடுவதில்லை.
இரவு பன்னிரண்டு மணிக்கு வந்தாலும், நாகம்மையார் சுடச்சுட உணவு தயாரித்து விருந்தளித்து விடுவார். அவரது விருந்தோம்பல் பணியைப் பாராட்டாத தமிழ்நாட்டுத் தலைவர்கள் இல்லையென்றே சொல்லிவிடலாம்.!
பெரியாரின் பொதுவாழ்விலும் நாகம்மையார் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அவர் மேற்கொண்ட எல்லாப் பராட்டங்களிலும் கலந்துகொண்டார். பெரியார் அவர்களின் பொது வாழ்வின் வெற்றிக்கு அவர் பெரிதும் உதவினார்.
திருமணம் ஆன இரண்டாண்டுக்குப் பின் நாகம்மையார் அழகான பெண் குழந்தைக்குத் தாயானார். ஆனால், அந்தக் குழந்தை ஐந்து மாதங்களில் இறந்துவிட்டது. பெரியார் மனைவிக்கு ஆறுதல் சொன்னார். ஆனாலும் ஒருநாள் –
வாழ்க்கையில் வெறுப்புற்று, பெரியார் வீட்டைவிட்டு வெளியேறினார். யாரிடமும் சொல்லாமல்கொள்ளாமல் ஊர் விட்டுப் புறப்பட்டார்.
பெரியார் துறவியானார்!
இந்நிகழ்ச்சியை வேடிக்கை என்பதா? வேதனை என்பதா?
எந்தக் குறையும் இல்லை.
செல்வமும் செழிப்பும் செறிந்த வாழ்க்கை …
ஆனாலும்,
பெரியார் துறவியானார்!
அது தனி வரலாறு, காசி முதலான இடங்களுக்குச் சென்று திரும்பினார் பெரியார்.
சித்தனையாளர் – சீர்திருத்தவாதி பெரியார், மூடப்பழக்க வழக்கங்களை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று அரும்பணியாற்றியவர். தான் உணர்ந்த உண்மைகளை ஊருக்கு எடுத்துரைக்க தயங்காதவர்.
சொற்பொழிவுகள் மூலம் மக்களின் அறியாமையைப் போக்கி பகுத்தறிவை வளத்தவர் பெரியார். 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தம் அன்புத் துணைவியார் நாகம்மையாருடன் மலேயா பயணம் செய்தார். அதுதான் முதல் மலேயா பயணம். அங்கு அவர் பினாங்கு, கோலாலம்பூர் தைப்பிங், மூவார், மாக்கா… போன்ற ஊர்களில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். சிந்தனையைத் தூண்டும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
பெரியார்- நாகம்மையார் இல்லற வாழ்க்கை இயல்பாகத்தான் சென்று கொண்டிருந்தது. காரியம் யாவினும் கை கொடுக்கும் காரிகையாகத்தான் நாகம்மை விளங்கினார்.

periyar